Five Poems

Atmanam

இந்த நகரத்தை எரிப்பது

இந்த நகரத்தை எரிப்பது
மிகச் சுலபம்
ஒரு தீப்பெட்டி போதும்
தீப்பெட்டி விலை மிக மலிவு
ரொட்டியின் விலையைவிட
மிகமிக
ஒரு லிட்டர் கிரஸினும் வேண்டும்
அதுவும் கிடைக்கும்
அரசின் சீரிய வினியோகிப்பில்
ஓசைகள் குறைந்த நள்ளிரவில்
எங்கேனும் துவங்கலாம்
துணிவுள்ளவன் விழித்திருந்து
அனுமான் எரித்தான் லங்கையை
வாலில் தீ வைத்தபோது
வானைத் தொட்ட தீ தணிந்தது
எழுந்தது புது லங்கை
அழிந்தானா ராவணன்
போராடினான் நாட்கணக்கில்
மடிந்தான் குருதி வெள்ளத்தில்
இன்றும்
அனுமான்கள் உண்டு வாலின்றி
ராவணர்களும் உண்டு
தீயுண்டு நகரங்கள் உண்டு
தனியொருவன் எரித்தால்
வன்முறை
அரசாங்கம் எரித்தால் போர்
முறை.




ஒரு கவிதை எனும் ஒரு கவிதை

என் கையெழுத்தை இழந்த ஒரு
நாள்
போலியாய் என் மனம் காலியா
னது
சுற்றிலுமிருந்த வெட்டவெளிச்சம்
எனை ஆட்கொண்டது

ஒருவரும் அனுதாபத்துடன்
அணுகவில்லை
காலை மாலை இரவு எல்லாம்
நன்கு தெரிந்தன

ஒரே பாதையில் சுழலத் துவங்கி
னேன்
எல்லையற்ற பெருவெளியில்
போலி மனம்

அவ்வப்போது சில முட்டைகள்
உடைந்தன
என்னளவில் ஆகாயம் எனக்குள்

ஊஞ்சலில் திருகாணியாய் வலம்
வந்து
சுமந்தேன் விட்டத்தைக் கால்
மேல்.




எழுப்பப்பட்ட சப்தம்

சப்தம் எழுந்துவிட்டது
கடலிலிருந்து
வண்டிலிருந்து
அக்கடா என்று கூறு போடப்பட்ட
வயல்களிலிருந்து
ஓவியத்திலிருந்து
இறுதியாக

ஒரு சொல்லிலிருந்து
அமைதி குலையத் தொடங்கிற்று
சப்தத்தின் பிடிப்பிலிருந்து
ஓடி ஒளியத்துவங்கிற்று
அமைதியைக் காண இயலா
சப்தம்
பெரும் கூச்சலுடன் ஓய்ந்தது
நிசப்தம் உருவாயிற்று
எங்கும் ஒரே நிசப்தம்
நிசப்தத்தைக் கண்டு அஞ்சிய
உலகம்
சப்தம் போட ஆரம்பித்தது
மாறி மாறி
சப்தமும் நிசப்தமும்
ஆட்சி புரியத் தொடங்கிற்று
சிறிது காலத்தில்
சப்தமும் நிசப்தமும்
ஒன்றாயிருக்கப் பழகிவிட்டன
இணைபிரியா ஒன்றாகிவிட்டன
சப்த நீட்சியின் ஓரத்தில்
அமைதி
பேரமைதிக்கான
தவத்தைத்
துவங்கிற்று.




இல்லாத தலைப்பு

நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன்
என்பது தெரியாமலே
இருக்கிறேன்
நான் இருப்பதைத்
தெரிந்துகொண்டபோது
நானும் நானும் இருந்தோம்

உண்மையான நானும்
உண்மை போன்ற நானும்
பேசிப்பேசி
உண்மை போன்ற நானாய்
நானாகிவிட்டேன்

உண்மையான நான்
அவ்வப்போது ஆவேன்
உண்மை போன்ற நான்
மறைந்திருக்கையில்

உண்மை போன்ற நான்
இல்லவே இல்லை என்று
உண்மையான நான் சொல்லும்

சரி என்று
உண்மை போன்ற நான்
ஆமோதிக்கும்

இதனைக் கவனித்த நான்
உண்மையான நானும் இல்லை
உண்மை போன்ற நானும்
இல்லை
நான் மட்டும் இருக்கிறேன்
என்றுணர்ந்தேன்
நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது

அமைதியாய் இருப்பதை
உணர்ந்தும்
நான் வேறு ஆகிவிட்டேன்
நானும் வேறான நானும் பொய்
நான் இல்லை.




அந்தப் புளியமரத்தை

நேற்றிலிருந்து
அந்தப் புளியமரத்தை
வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்

முதலில்
புளியமரத்தின் உச்சியை அடைந்
தார்கள்
சிறிய சிறிய கிளைகளை
முறித்துக்கொண்டார்கள்
இலைகள் மலர்கள்
உதிர உதிரச் சிறிய
கிளைகள் பூமியைத் தழுவின

சிறிய கிளைகள் இழந்த மரம்
அருவ உருவில்
வானத்தை
உறிஞ்சிக்கொண்டிருந்தது

மரத்திலிருந்து இறங்கியவர்கள்
ஒரு மாபெரும்
மரமறுக்கும் ரம்பத்தைக்
கொண்டுவந்தார்கள்

புளியமரத்தின்
அடியைக் குறிபார்த்துக்
கீறிக்கொண்டிருந்தார்கள்
பொடித்துகள்கள்
இருபுறமும் கசிய
நெடுமரத்தைச் சாய்த்தார்கள்
மீதம் உள்ள கிளைகளையெல்
லாம்
வெட்டி வெட்டி அடுக்கினார்கள்

கட்டை வண்டியில் ஏற்றிப்
புறப்பட்டார்கள்

இலை தழைகளுக்கிடையே
ஒரு புளியஞ்செடி
தன்னைப் பார்த்துக்கொண்டது.